Monday, 16 December 2013

சுமை

குண்டும் குழியுமாய்ப் பரவிக் கிடந்த சாலையில் கால் பதிக்க இடம் தேடி குனிந்தத் தலை நிமிராமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த வயோதிகர்.அவருக்குத் தோராயமாக ஒரு எழுபது வயது இருக்கும். காலம் பதித்த முட்களாய் முகம் முதல் கால் வரை அனுபவத்தின் ஆழ்க் குறியீடுகள் சிதறிக் கிடந்தன.

கண்ணுக்குக் கீழே, கருப்பாய் அரசு காண்டிராக்டர் 90% கமிசன் கொடுத்துவிட்டுப் போட்டிருந்த சாலை போல பதிந்திருந்த வளையம் மனோதத்துவ மருத்துவர்களால் கவலையின் வெளிப்பாடு என்று வர்ணிக்கப்படும்.கையில் ஒரு காலி பாட்டில் காலில் நைந்துத் தேய்ந்த செருப்பு. ஆனாலும் சோக்காய் இஸ்திரி செய்யப்பட்டிருந்த கோர்ட்டுக்குள்ளிருந்து வெளியே மினுமினுக்கும் மஞ்சள் சட்டை என்று செல்வத்தைப் பறைசாற்றும் ஆடைகள்.

எங்கோப் போய்க் கொண்டிருக்கிறார். பெற்றப் பிள்ளை கஞ்சி ஊத்தவில்லை என்று கமிஷனரிடம் புகார் கொடுக்கவோ? இல்லை அம்மா கடையில் நாலு இட்லி வாங்கி வயிற்றை ரோப்பவோ? ஒருவேளை காலையில் க்யூவில் கலந்தால் தான் மாலையில் அடுப்பில் உலை வைக்க அரிசியும் மண்ணெண்ணையும் ரேசனில் வாங்கலாம் என்றோ...

படு கேசுவலாக android போனில் '7G ரெயின்போ காலனி' பாட்டுக் கேட்டுக் கொண்டே துள்ளலும் நடையுமாக வந்து கொண்டிருந்தான் அவருக்கு எதிர் திசையில் விஜயன். விஜயன் அப்பாவின் நண்பரின் ரெகமெண்டேசனில் ப்ரைவேட் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து மூன்று  மாதம் தான் ஆகியிருந்தது. அப்பா அம்மாவின் கண்டிப்புகளிலிருந்தெல்லாம் தற்காலிக விடுதலை வாங்கி சுடிதார் வாசனைகளை ரசிக்க ஆரம்பித்திருந்தான். எல்லாம் புதிதாகவும் விருப்பமாகவும் இருந்தது.

வயதானவரின் நடுக்கத்தைப் பார்த்ததும் அவனுக்கு மனது இளகியது. ஏதாவது உதவலாமே என்ற நல்லெண்ணமும் சுவராஸ்யமாக எதாவது ரசிக்கக் கிடைக்கும் என்ற ஆவலும் நெருக்க அவரை அணுகினான்.

'தாத்தா பாக்கப் பலசாலியாத்தான் தெரியுறீங்க, மார்கழிக் குளிருமில்ல பின்ன ஏன் நடுங்கிறீங்க?' கேள்வியில் கொக்கிப் போட்டான்.

மங்கள்ராய்ன் ராக்கெட் வேகத்தில் நிமிர்ந்து எட்டிப் பார்த்தவர், மீண்டும் குனிந்து தனது அடுத்த ஸ்டேப்பிற்காக சம தளத்தைக் காலால் தேடுவதில் தீவிரமானார்.

'தாத்தா' என்று அவர் கையை சிநேகத்துடன் பற்றினான். கையை வெடுக்கென்று உதறியவர், சுட்டெரிப்பதுப் போலப் பார்த்து பேசினார், 'தம்பி, ஊரான் காசில வாழ்க்கையை வேசிக்கும் உன்னால எனக்கு என்னப்பா உதவ முடியும்?'.

அவரின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் விஜயனைத் தண்ணீரிலிருந்துப் பிரித்த மின்சாரம் தாக்கியதாயிருந்தது.

'என்ன தாத்தா இப்படி சொல்லிபுட்டிங்க? நான் எங்க அம்மா அப்பா சம்பாத்தியத்துல தான் ஜீவிக்கிறேன். உங்களுக்கு உதவனும்னு..."

ரஜினி ஸ்டைலில் இடைமறித்தவர், 'தம்பி நான் அனுமானிச்சது சரிதானே... நீங்க சம்பாரிக்கல...உங்களால எனக்கு என்ன ஆகப் போகுது? விலகுங்க தம்பி' என்றார்.

இவர் காசு எதிர்பாக்கிராரோ? ச்சே அப்படி இருக்காது. உழைக்காதப் பிள்ளையை பெற்றவராயிருப்பார். அதான் டீசன்டான வாலிபனைக் கண்டதும் ஆதங்கப் படுகிறார்.

'தாத்தா உங்களுக்கு ஏதாவது உதவனும்னுதான் கேட்டேன். உங்க பிள்ளையாலப் பிரச்சினையா?'

'இல்ல தம்பி... அவன் ஜெம்னா நான் வைரம் தம்பி...என் பிரச்சினை என்னன்னா...' சொல்ல வந்ததை முடிக்காமல் இழுத்தார்.

'தயங்காம சொல்லுங்க தாத்தா... எங்கப்பா பெரிய ஆளு... அவருக்கு எல்லா பீல்டுலயும் தெரிஞ்சவுங்க இருக்காங்க...ஏதாவது ஒரு வழியில என்னால உதவ முடியும்னு நினைக்கிறேன்.'

'ம்...' என்று முகத்தில் 500 வாட்ஸ் பிரகாசம் காட்டியவர். 'நான் ஒரு படைப்பாளி...' என்று தொடங்கி நீண்ட சத்திய சோதனைப் பிரசங்கம் செய்தார். அவர் சொன்ன பல விசயங்களை ஏற்கனவே சில ப்ளாக்களில் வாசித்திருக்கிறான். ஆனால் எழுதியவர் தான் நியாபகம் இல்லை.

அவரது பிரச்சனை பெரும் பணத்தோடு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பது தான். சாதாரண எழுத்தாளரான அவரால் கல்லூரி பேராசிரியார் போல சுளையான சம்பளமோ ஐ. டி. இஞ்சினியர் போல ATM பிதுங்கும் வருமானமோ வாங்க முடியவில்லை.

கட்டிய மனைவி வெறுத்ததால், சம்பளத்திற்காக ஒருத்தியை சேர்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அவளுக்கும் இவரின் சுயரூபம் தெரிய வரவே ஒதுக்கி வைத்து விட்டாள்.

சொந்தக் கதையை சரோஜாதேவி ஸ்டைலில் எழுதி கல்லா கட்டிப் பார்த்தார். பெரிதாகத் தேறவில்லை. வாசகர்களைக் கூட்டி உண்டியல் குலுக்கிப் பார்த்திருக்கிறார் அப்போதும் முதலுக்குத் தான் மோசம் நேர்ந்துள்ளது. கூடவே ஒட்டியிருக்கும் நண்பர்கள் சிலர் போட்ட தூபத்தால் சர்வதேச பரிசு என்ற மோகம் வேறு சேர்ந்து கொண்டதால் அவரது சுமை கூடிக் கொண்டேயிருந்தது.

'தம்பி என்னால எழுதிப் பெருசா சம்பாதிக்கவும் முடியல... வெக்கத்த விட்டு பிச்சையெடுக்கவும் மனம் ஒப்பல...'

அதனால் தான் இந்தத் தளர்ந்த நடையா?

'நல்ல வேளை நான் எழுத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கவும் இல்லை. கழுத்துக்கு மேலே பாரமாகவும் இல்லை.' என்று விஜயனின் மனம் நிம்மதியாய் உணர்ந்தது. தன்னைப் பெற்ற அம்மாவுக்கும் மகனாக ஏற்றுக் கொண்ட அப்பாவுக்கும் மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டான்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு அவனுக்கு இந்தச் சுமையில்லை என்பது சந்தோசமாக இருந்தது.

No comments:

Post a Comment