Friday 29 May 2015

படக்கவிதை


வல்லமை.காம் படக்கவிதைப் போட்டியில் என் கவிதைகள்.

http://www.vallamai.com/?p=57906

(1) திரிசங்கு சுவர்க்கம்


ஐந்தில் வளையாதது

ஐம்பதில் வளையுமா?
தொட்டிற் பழக்கம்
சுடுகாடு மட்டும்
என்று ப்ரி கேஜிலேயே
வளைத்துப் பழக்குபவர்கள்
பிஞ்சில் பழுத்தவன்
என்று நீ வளர்ந்ததும்
ஒதுக்கலாம்!

மரத்திற்குக் கிளைகள் பலவுண்டு

ஆனால் தண்டு ஒன்றுதான்
உயரப் போனதும் எதிலும் அமரலாம்
ஆனால் உயரப் போக
வழுக்கும் தண்டு
வசப்படாமலும் போகலாம்!
மரத்தைத் தாங்கமட்டும்
விழுதுகள் அல்ல
ஏற கைப்பிடியும் அது தான்
என்றுணர்ந்ததால்
நீ உயரத்தில்

கிளைகளுக்கிடையில்

உன் இருக்கை
தெம்பைத் தருகிறது
திரிசங்கு சுவர்க்கமாயினும்.
கீழே விழுந்து கிடக்கும்
இலைகளும்
நிழலும்
உன்னைச் சுமக்கும்.

மரக் குரங்கு விளையாட அல்ல
உலகைப் பார்க்க
நீ மரத்தில் ஏறினாய்
இன்னும் உயரம் தாண்டிப் பயணம்
இருக்கு
சிரிப்பை மிச்சப்படுத்தி
சிந்தனையைச் செம்மைப்படுத்து.

Photo: திரு. பாபு ராஜ்

(2) கிளை வேண்டும்



பெரிய பச்சை மரமே
உன் கிளையை எனக்குத்
தருவாயா?

தாவி தாவி விளையாட அல்ல
தாபரம் வேண்டி.

விரட்டும் நாய்
மிரட்டும் சிங்கம்
எதுவுமில்லை 
மிட்டாய்த் தருகிறேன் இறங்கி வா...
பள்ளிக்குப் போகலாம் இறங்கி வா...
உயரம் உனக்கு உபத்திரவமே இறங்கி வா...
என்று என்னை இழுத்து இறக்க
நிற்குது கூட்டம் கீழே.
நீ சாயாத வரை
நான் தரையில் விழேன்.

மரத்தைக் கொன்று
வார்த்தையைப் படைக்கும்
பாடம் வேண்டாம்
கரும்பைக் கூழாக்கி
இனிப்பைப் பிரித்துத் தரும்
மிட்டாய் வேண்டாம்
வானம் காட்டும் உன் உயரம் வேண்டும்
கசப்பை விதைக்கும் பழமே போதும்.

பெரிய பச்சை மரமே
உன் கிளையை எனக்குத்
தருவாயா?

Monday 11 May 2015

ஒரு படம் இரண்டு கவிதைகள்

இதயம் போதும்


காற்றடைத்த பலூனே
உயரப் பறக்கும் போது
உயிரடைத்த உடம்பு
விழுந்தா விடும்
மண்ணில்?

எழுந்து நிற்க
கால்கள் வேண்டாம்
தூக்கி நிறுத்த
துணைகள் வேண்டாம்
இதயம் போதும்!
 
மிரள வேண்டாம் நண்பா
என் கவிதைக்குள் உன்னைக்
காட்சியாக்கி
ஊருக்குள் உன் உரத்தை
உரக்கச் சொல்வேன்...
துணிந்து வா நண்பா.

Photo credit: திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம்

இனி எல்லாம் கனவில் தான்


பள்ளிக்கூடம் போகலாம்
பாடம் படிக்கலாம்
ஓடி ஆடி விளையாடலாம்
பலூன் உடைத்து விளையாடலாம்
கோவில் கொடையன்று
பலூன் பொம்மைகள் வாங்கலாம்
இனி எல்லாம் கனவில்தான்.

முன்பெல்லாம்
வியாபாரம் முடித்து
மாலையில் தேன் மிட்டாய்
வாங்கிக் கொண்டு வரும் அப்பாவுக்குக்
காத்திருப்போம்…
தெருக் கோடியில்
அப்பாவின் சைக்கிள் சத்தம்
கம்பில் பறக்கும் பலூன்கள் படபடப்பு
காணாமல் போன ஜவ்வு மிட்டாய்
தரும் ஆயிரம் உணர்ச்சிக் குவியல்
இனி எல்லாம் கனவில் தான்.

அம்மா காத்திருப்பாள்
சந்தையில் வாங்கி வரும்
சமையல் சாமான்களுக்காகவும்
பத்திரமாய்க் கூட்டி வரும்
அப்பாவுக்காகவும்.
சீக்கிரம் போட்டோ எடுங்க அண்ணே
வீட்டுக்குப் போகணும்.