Friday, 29 May 2015

படக்கவிதை


வல்லமை.காம் படக்கவிதைப் போட்டியில் என் கவிதைகள்.

http://www.vallamai.com/?p=57906

(1) திரிசங்கு சுவர்க்கம்


ஐந்தில் வளையாதது

ஐம்பதில் வளையுமா?
தொட்டிற் பழக்கம்
சுடுகாடு மட்டும்
என்று ப்ரி கேஜிலேயே
வளைத்துப் பழக்குபவர்கள்
பிஞ்சில் பழுத்தவன்
என்று நீ வளர்ந்ததும்
ஒதுக்கலாம்!

மரத்திற்குக் கிளைகள் பலவுண்டு

ஆனால் தண்டு ஒன்றுதான்
உயரப் போனதும் எதிலும் அமரலாம்
ஆனால் உயரப் போக
வழுக்கும் தண்டு
வசப்படாமலும் போகலாம்!
மரத்தைத் தாங்கமட்டும்
விழுதுகள் அல்ல
ஏற கைப்பிடியும் அது தான்
என்றுணர்ந்ததால்
நீ உயரத்தில்

கிளைகளுக்கிடையில்

உன் இருக்கை
தெம்பைத் தருகிறது
திரிசங்கு சுவர்க்கமாயினும்.
கீழே விழுந்து கிடக்கும்
இலைகளும்
நிழலும்
உன்னைச் சுமக்கும்.

மரக் குரங்கு விளையாட அல்ல
உலகைப் பார்க்க
நீ மரத்தில் ஏறினாய்
இன்னும் உயரம் தாண்டிப் பயணம்
இருக்கு
சிரிப்பை மிச்சப்படுத்தி
சிந்தனையைச் செம்மைப்படுத்து.

Photo: திரு. பாபு ராஜ்

(2) கிளை வேண்டும்



பெரிய பச்சை மரமே
உன் கிளையை எனக்குத்
தருவாயா?

தாவி தாவி விளையாட அல்ல
தாபரம் வேண்டி.

விரட்டும் நாய்
மிரட்டும் சிங்கம்
எதுவுமில்லை 
மிட்டாய்த் தருகிறேன் இறங்கி வா...
பள்ளிக்குப் போகலாம் இறங்கி வா...
உயரம் உனக்கு உபத்திரவமே இறங்கி வா...
என்று என்னை இழுத்து இறக்க
நிற்குது கூட்டம் கீழே.
நீ சாயாத வரை
நான் தரையில் விழேன்.

மரத்தைக் கொன்று
வார்த்தையைப் படைக்கும்
பாடம் வேண்டாம்
கரும்பைக் கூழாக்கி
இனிப்பைப் பிரித்துத் தரும்
மிட்டாய் வேண்டாம்
வானம் காட்டும் உன் உயரம் வேண்டும்
கசப்பை விதைக்கும் பழமே போதும்.

பெரிய பச்சை மரமே
உன் கிளையை எனக்குத்
தருவாயா?

Monday, 11 May 2015

ஒரு படம் இரண்டு கவிதைகள்

இதயம் போதும்


காற்றடைத்த பலூனே
உயரப் பறக்கும் போது
உயிரடைத்த உடம்பு
விழுந்தா விடும்
மண்ணில்?

எழுந்து நிற்க
கால்கள் வேண்டாம்
தூக்கி நிறுத்த
துணைகள் வேண்டாம்
இதயம் போதும்!
 
மிரள வேண்டாம் நண்பா
என் கவிதைக்குள் உன்னைக்
காட்சியாக்கி
ஊருக்குள் உன் உரத்தை
உரக்கச் சொல்வேன்...
துணிந்து வா நண்பா.

Photo credit: திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம்

இனி எல்லாம் கனவில் தான்


பள்ளிக்கூடம் போகலாம்
பாடம் படிக்கலாம்
ஓடி ஆடி விளையாடலாம்
பலூன் உடைத்து விளையாடலாம்
கோவில் கொடையன்று
பலூன் பொம்மைகள் வாங்கலாம்
இனி எல்லாம் கனவில்தான்.

முன்பெல்லாம்
வியாபாரம் முடித்து
மாலையில் தேன் மிட்டாய்
வாங்கிக் கொண்டு வரும் அப்பாவுக்குக்
காத்திருப்போம்…
தெருக் கோடியில்
அப்பாவின் சைக்கிள் சத்தம்
கம்பில் பறக்கும் பலூன்கள் படபடப்பு
காணாமல் போன ஜவ்வு மிட்டாய்
தரும் ஆயிரம் உணர்ச்சிக் குவியல்
இனி எல்லாம் கனவில் தான்.

அம்மா காத்திருப்பாள்
சந்தையில் வாங்கி வரும்
சமையல் சாமான்களுக்காகவும்
பத்திரமாய்க் கூட்டி வரும்
அப்பாவுக்காகவும்.
சீக்கிரம் போட்டோ எடுங்க அண்ணே
வீட்டுக்குப் போகணும்.

Thursday, 4 December 2014

அணில்

அணில்

மதியம் வெயில் குளிரை விரட்டிவிட்டு வெளிச்சம் காட்டும் போது கம்பம்புல், சோளம், அரிசி கலந்த கலவையை ஒரு சட்டியில் கொட்டி வைப்பேன். அதைத் தின்ன அணில், மாடப் புறா, பூணியல் எல்லாம் 'கிச்கிச்'சென்று கூட்டமாய் வரும். அவை சண்டையிட்டுக் கொண்டும் சமரசம் செய்து கொண்டும் அதை உண்ணும் அழகு நேர்த்தியானது. மாடப் புறா மற்றும் பூணியல் எந்த வித ஆட்சேபமும் காட்டாமல் நெருங்கி நின்று உண்ணும். அணில் வந்து விட்டால் யாரையும் அண்ட விடாது. எல்லாம் தனக்கு மட்டும் தான் என்று உக்கிரம் காட்டும். அணிலுக்கு மட்டும் ஏன் இந்த குணம்? இராமரின் தயவு இருக்கிறது என்ற இறுமாப்போ?

அணில் என்றாலே சுவராஸ்யம் தான்.

என் வீட்டு முற்றத்தில் ஈஸி சேரில் சாய்ந்தாடிக் கொண்டே, தோட்டத்தில் தென் மூலையில் இலைகளை உதிர்த்து குச்சி குச்சி கம்புகளாய் நின்று கொண்டிருந்த உசிலை மரத்தின் தூரருகே அந்த அணில் என்ன செய்கிறது என்று வேடிக்கையாக நோட்டம் விட்டேன்.

கொசுவலை போல கிழிந்து போயிருந்த ஒரு கந்தல் துணியை வாயில் கவ்விக் கொண்டு மரத்தில் பின்னோக்கி ஏற எத்தனித்துக் கொண்டிருந்தது அந்த அணில். எலி ஒன்று யானையை வாலைப் பிடித்து இழுத்து மேம்பால உச்சிக்கு கொண்டு செல்ல முயல்வது போல இருந்தது அதன் செயல்.

முதல் தடவை பின்னங்கால்களை உயர்த்தி மரத்தில் வைத்த தருணத்திலேயே பேலன்ஸ் தவறி குட்டி கரணம் அடித்து சரிந்தது.

இரண்டாவது தடவை சமர்த்தாக இரண்டு ஸ்டெப்புகள் மேல் நோக்கி வைத்து முன்னேறியது. பரவாயில்லையே என்று நான் கண்களை விரித்து ஐயம் காண்பித்தேன். என் கண் பட்டதோ என்னவோ, அணில் தலை தரையில் மோதி மல்லாந்து விழுந்தது. ஆனாலும் வாயில் கவ்வியிருந்த துணியை விடவில்லை.

மீண்டும் முயற்சித்தது, மீண்டும் விழுந்தது. இப்படியே அது என் முன்னால் ஒரு விக்கிரமாதித்தனாய் பரிணமித்துக் கொண்டிருந்தது...

இது விளையாடுகிறதா? அல்லது ஏதாவது தேவையினிமித்தம் இப்படி செய்கிறதா?

குளிர் உடலை கவ்வ ஆரம்பித்தது. வீட்டிற்குள் செல்லலாம் என்று எழும்பினேன். சட்டென்று ஏப்ரல் மாதம் இதே போல நடந்த ஒரு சம்பவம் கண் முன் விரிந்தது.

********

குளிர் தணிந்து வெயில் படரத் தொடங்கியிருந்த காலம்.

இதே உசிலை மரத்தடியில் அந்த துணி கிடந்தது. பார்க்க அசிங்கமாக இருந்ததால், எடுத்து குப்பைத் தொட்டியில் கடாசினேன். மதியம் சாப்பிட வந்த போது கவனித்தேன் அதே துணி மீண்டும் மரத்தடியில் கிடந்தது? இது எப்படி சாத்தியம்?

ஒரு வேளை தோட்டக்காரர் எடுத்து வந்திருப்பாரோ? அவர் தேவைக்கு வைத்திருந்த துணியோ? நான் ஆபிசுக்கு போன பிறகுதான் தோட்டக்காரர் வந்திருப்பார். அவர் வேலையாகத்தானிருக்கும். இருந்தாலும் இந்த கந்தல் துணியில் என்ன செய்யப் போகிறார். கை துடைக்கக் கூட உதவாது. மீண்டும் எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு வீட்டிற்குள் போனேன்.

சாப்பிட்டு விட்டு ஆபிசுக்குக் கிளம்பும் போது ஒரு வித ஆர்வத்தோடு குப்பைத் தொட்டியில் நோட்டம் விட்டேன். பகீரென்றது! அந்தத் துணியைக் காணவில்லை. அசுர வேகத்தில் கண்களை உசிலை மரத்தடிக்குத் திருப்பினேன். அங்கு அந்தத் துணி கிடந்தது. தோட்டக்காரர் காலையில் மட்டும் தான் வருவார். நிச்சயமாக இது அவர் வேலையில்லை. அப்படியானால் யார் என்னிடம் கண்ணாம்பூச்சி காட்டுகிறார்கள்? உசிலை மரத்தில் பேயிருக்கும் என்று பாட்டி சொன்ன கதைகள் மூளையில் வியாபித்து பயம் தந்தது. ஆனாலும், இன்ஜினீயரிங் படிப்பு அப்படியிருக்காது என்று பயத்தை வழித்து எறிந்தது.

துணி எப்படி மரத்தடிக்குப் போகிறது என்பது தெரிந்தாக வேண்டும். இல்லையென்றால் மூளையில் ஓட்டை விழுந்தது போலிருக்கும். அந்தத் துணியை எடுத்து மீண்டும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, சாய் நாற்காலியை எடுத்து வந்து முற்றத்தில் அமர்ந்தேன்.

"என்னங்க ஆபிசுக்குப் போவலயா?"

"ம் போவணும்"

கண்கள் குப்பை தொட்டியில் ஒட்டிக் கிடந்தன. கையில் ஏதாவது புத்தகத்தை எடுத்து வாசிக்கலாம் போலிருந்தது. ஆனாலும் கவனம் தவறினால் துணி 'நடப்பதைப்' பார்க்க முடியாது என்று தவிர்த்தேன்.
அப்போதுதான் அது நிகழ்ந்தது.

ஒரு அணில் அரக்கப் பரக்க குப்பைத் தொட்டிக்குள் புகுந்தது. அது வெளியே வந்த போது அதன் வாயில் அந்தத் துணியைக் கவ்விக் கொண்டிருந்தது. துணியை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றது உசிலை மரத்தடிக்கு. எனக்கு வியப்பாக இருந்தது. மரத்தடியை அடைந்ததும் துணியை அங்கே போட்டு விட்டு. மரத்தில் ஏறி கிளை பிரிவில் உட்கார்ந்து கொண்டு தலையை மட்டும் வெளியே காட்டி என்னையே பார்ப்பது போல இருந்தது.

*******

அந்த அணில் தானா இது. வெயில் காலத்தில் வேண்டாம் என்று வெளியே எறிந்ததை, இப்போது குளிர் காலத்தில் போர்வையாக உபயோகிக்க எடுத்துச் செல்லப் பார்க்கிறதோ? வெயில் காலத்தில் துணியின் மேல் படுப்பது எரிச்சலாகத் தானிருக்கும்.

அணிலால் மேலே எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் மேலிருந்து கீழே போடுவது சிரமமில்லை. இப்படித்தான் வாழ்க்கையில். உயரச் செல்வது சிரமம். நிறைய சுமைகளை இழுத்துச் செல்ல வேண்டும். ஆனால் கெட்டழிவது ஈசி. அதற்கு வழிநடத்த நிறைய பேர் கிடைப்பார்கள்.

அணிலுக்கு உதவ நினைத்தேன். மரத்தடியில் கிடந்த துணியை எடுத்து கிளை பிரிவில் போட்டேன். அணில் எங்கோ ஓடி ஒளிந்திருந்தது.

மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கவனித்தேன். அணில் துணியை கிளை இடுக்கில் மெல்ல மெல்ல இழுத்து வைத்துக் கொண்டது.

இப்போதெல்லாம் அணிலைப் பார்க்கும் போது அது என்னிடம் ஏதோ சொல்ல வருவது போலத் தோன்றும்.

Wednesday, 19 February 2014

தெய்வீக நரகம்

நல்ல வேளை
இந்தப் பலியாடுகள்
கெட்ட மேய்ப்பனால்
இரட்சிக்கப்பட்டன.

கோவில் கிடாவுக்கு
எத்தனை மரியாதை?
விரும்பியதெல்லாம் தின்னலாம்
விரட்டியடிக்க ஆளில்லை
எல்லாம் கொடை நாள் வரைதான்
மஞ்சள் தண்ணி தெளித்ததும்
முச்சு திணருதேயென்று
தலையை ஆட்டினால்
சாமி இறங்கிடும்
யாருக்கும் மனது இரங்காது!

புண்ணியம் செய்தா இவை
கோவிலுக்கு நேரப்பட்டன?
குற்றம் செய்தால்
மாற்றத்திற்காக சிறையில் பூட்டுவர்
குற்றத்தைப் பார்த்ததால்
ஒரு மாறுதலுக்காக
இவர்களுக்குத் தண்டனையா?

பெற்ற தாயின்
வயிரறுத்து
அவதரிக்கவில்லை
அவள் பாலுறுப்பு
வஞ்சிக்கப்பட்டதைப்
கேட்கவும் இல்லை...
பாவம் செய்தா இவை
நரகத்தில் தள்ளப்பட்டன...?

சுவாமிகளின்
நித்ய அவதாரங்களும்
சூழ்ச்சிகளின் கூடாரம்
எழுப்புவதால்
இங்கு தெய்வீக நரகங்களே
மிஞ்சுகின்றன...

சதாமும் லேடனும்
ஏன் பிராய்லரும்
வளர்க்கப்படுவதே
தெய்வீக நரகத்தில்
சிலரின் மோட்ச ஆலாபனைக்காகத்தானே?

இப்படியிருக்க
நல்ல வேளை
இந்தப் பலியாடுகள்
கெட்ட மேய்ப்பனால்
இரட்சிக்கப்பட்டன.

Thursday, 2 January 2014

கிரஜுவேசன் கொண்டாட்டம்



முதல் புணர்வில்
உதிரம் காட்டினேன்
ஐந்தாண்டுகளில்
நான்கு ஜீவன்களை ஈன்றேன்
பாராட்டினார்கள்
'பத்தினி' பட்டமும் தந்து.
ஆனால் கடைசி வரை
எனக்கு மட்டும்
'ஆர்கசம்' கிட்டவேயில்லை.

எனக்கும் உச்சம் பெற ஆசைதான்
முயற்சித்தேன்...
கிடைத்தது
ஆர்கசமும்
'வேசி'யென்றக் கிரீடமும்.

இளங்கலைப் பயின்றவர்
மேலும் படித்து
முதுகலைப் பட்டயம்
பெறுவது மட்டும்
மகிழ்ச்சியாயிருக்கிறது! 

Sunday, 29 December 2013

ஒவ்வொரு துளியிலும் உன் நினைவுகள்


ஒவ்வொரு துளியிலும்
உன் நினைவுகள் சிதறுகின்றன...

பொதுவாக நான்தான் வற்புறுத்தி உன்னை
வெளியே அழைத்துப் போயிருக்கிறேன்.
மொக்க ஸ்டேடஸ்-க்கு நிஜ பெண் ஐடி லைக் போடுவது போல
சில நேரங்களில்தான் நீயாக முன்வந்து
பார்க்குக்குப் போகலாமா என்பாய்...
அன்றும் அப்படித்தான் பீச்சுக்கு போகலாமா என்றாய்.



பீச் என்றதும் சுண்டல்,
குடை போல் வளைந்து நிழல் தரும் காதலிகள்,
பொரித்த மீன்,
வத்தல்பொடி தடவிய மாங்காய் துண்டு,
பலூன்கள்,
குதிரைகள்,
இத்யாதி இத்யாதிகள் இப்போது
ஞாபகத்துக்கு வருவதில்லை.
நீதான்...

மறுப்பேனா...
உன் அழைப்புகள் ஒவ்வொன்றும் எனக்கு
சுவர்க்கத்தைக் காட்டியிருக்கின்றன.
அன்றைய அழைப்பு உனக்கே சுவர்க்கத்தைக்
காட்டி விட்டதே...

நாம் சுற்றிய இடங்களில் நிறைய தொலைத்திருக்கிறோம்..
பென், பர்ஸ், கர்சீப், ஏன் செல்போன் கூட தொலைத்துவிட்டு வந்திருக்கிறோம்..
உன்னைத் தொலைத்ததை எப்படி மறப்பேனடி...

தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டுமாம்
உன்னை சுனாமியில் தவற விட்டுவிட்டேன்
இனி எங்கே தேடுவேன்?

ஒவ்வொரு துளியிலும்
உன் நினைவுகள் சிதறுகின்றன...

Monday, 16 December 2013

சுமை

குண்டும் குழியுமாய்ப் பரவிக் கிடந்த சாலையில் கால் பதிக்க இடம் தேடி குனிந்தத் தலை நிமிராமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த வயோதிகர்.



அவருக்குத் தோராயமாக ஒரு எழுபது வயது இருக்கும். காலம் பதித்த முட்களாய் முகம் முதல் கால் வரை அனுபவத்தின் ஆழ்க் குறியீடுகள் சிதறிக் கிடந்தன.

கண்ணுக்குக் கீழே, கருப்பாய் அரசு காண்டிராக்டர் 90% கமிசன் கொடுத்துவிட்டுப் போட்டிருந்த சாலை போல பதிந்திருந்த வளையம் மனோதத்துவ மருத்துவர்களால் கவலையின் வெளிப்பாடு என்று வர்ணிக்கப்படும்.



கையில் ஒரு காலி பாட்டில் காலில் நைந்துத் தேய்ந்த செருப்பு. ஆனாலும் சோக்காய் இஸ்திரி செய்யப்பட்டிருந்த கோர்ட்டுக்குள்ளிருந்து வெளியே மினுமினுக்கும் மஞ்சள் சட்டை என்று செல்வத்தைப் பறைசாற்றும் ஆடைகள்.

எங்கோப் போய்க் கொண்டிருக்கிறார். பெற்றப் பிள்ளை கஞ்சி ஊத்தவில்லை என்று கமிஷனரிடம் புகார் கொடுக்கவோ? இல்லை அம்மா கடையில் நாலு இட்லி வாங்கி வயிற்றை ரோப்பவோ? ஒருவேளை காலையில் க்யூவில் கலந்தால் தான் மாலையில் அடுப்பில் உலை வைக்க அரிசியும் மண்ணெண்ணையும் ரேசனில் வாங்கலாம் என்றோ...

படு கேசுவலாக android போனில் '7G ரெயின்போ காலனி' பாட்டுக் கேட்டுக் கொண்டே துள்ளலும் நடையுமாக வந்து கொண்டிருந்தான் அவருக்கு எதிர் திசையில் விஜயன். விஜயன் அப்பாவின் நண்பரின் ரெகமெண்டேசனில் ப்ரைவேட் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து மூன்று  மாதம் தான் ஆகியிருந்தது. அப்பா அம்மாவின் கண்டிப்புகளிலிருந்தெல்லாம் தற்காலிக விடுதலை வாங்கி சுடிதார் வாசனைகளை ரசிக்க ஆரம்பித்திருந்தான். எல்லாம் புதிதாகவும் விருப்பமாகவும் இருந்தது.

வயதானவரின் நடுக்கத்தைப் பார்த்ததும் அவனுக்கு மனது இளகியது. ஏதாவது உதவலாமே என்ற நல்லெண்ணமும் சுவராஸ்யமாக எதாவது ரசிக்கக் கிடைக்கும் என்ற ஆவலும் நெருக்க அவரை அணுகினான்.

'தாத்தா பாக்கப் பலசாலியாத்தான் தெரியுறீங்க, மார்கழிக் குளிருமில்ல பின்ன ஏன் நடுங்கிறீங்க?' கேள்வியில் கொக்கிப் போட்டான்.

மங்கள்ராய்ன் ராக்கெட் வேகத்தில் நிமிர்ந்து எட்டிப் பார்த்தவர், மீண்டும் குனிந்து தனது அடுத்த ஸ்டேப்பிற்காக சம தளத்தைக் காலால் தேடுவதில் தீவிரமானார்.

'தாத்தா' என்று அவர் கையை சிநேகத்துடன் பற்றினான். கையை வெடுக்கென்று உதறியவர், சுட்டெரிப்பதுப் போலப் பார்த்து பேசினார், 'தம்பி, ஊரான் காசில வாழ்க்கையை வேசிக்கும் உன்னால எனக்கு என்னப்பா உதவ முடியும்?'.

அவரின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் விஜயனைத் தண்ணீரிலிருந்துப் பிரித்த மின்சாரம் தாக்கியதாயிருந்தது.

'என்ன தாத்தா இப்படி சொல்லிபுட்டிங்க? நான் எங்க அம்மா அப்பா சம்பாத்தியத்துல தான் ஜீவிக்கிறேன். உங்களுக்கு உதவனும்னு..."

ரஜினி ஸ்டைலில் இடைமறித்தவர், 'தம்பி நான் அனுமானிச்சது சரிதானே... நீங்க சம்பாரிக்கல...உங்களால எனக்கு என்ன ஆகப் போகுது? விலகுங்க தம்பி' என்றார்.

இவர் காசு எதிர்பாக்கிராரோ? ச்சே அப்படி இருக்காது. உழைக்காதப் பிள்ளையை பெற்றவராயிருப்பார். அதான் டீசன்டான வாலிபனைக் கண்டதும் ஆதங்கப் படுகிறார்.

'தாத்தா உங்களுக்கு ஏதாவது உதவனும்னுதான் கேட்டேன். உங்க பிள்ளையாலப் பிரச்சினையா?'

'இல்ல தம்பி... அவன் ஜெம்னா நான் வைரம் தம்பி...என் பிரச்சினை என்னன்னா...' சொல்ல வந்ததை முடிக்காமல் இழுத்தார்.

'தயங்காம சொல்லுங்க தாத்தா... எங்கப்பா பெரிய ஆளு... அவருக்கு எல்லா பீல்டுலயும் தெரிஞ்சவுங்க இருக்காங்க...ஏதாவது ஒரு வழியில என்னால உதவ முடியும்னு நினைக்கிறேன்.'

'ம்...' என்று முகத்தில் 500 வாட்ஸ் பிரகாசம் காட்டியவர். 'நான் ஒரு படைப்பாளி...' என்று தொடங்கி நீண்ட சத்திய சோதனைப் பிரசங்கம் செய்தார். அவர் சொன்ன பல விசயங்களை ஏற்கனவே சில ப்ளாக்களில் வாசித்திருக்கிறான். ஆனால் எழுதியவர் தான் நியாபகம் இல்லை.

அவரது பிரச்சனை பெரும் பணத்தோடு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பது தான். சாதாரண எழுத்தாளரான அவரால் கல்லூரி பேராசிரியார் போல சுளையான சம்பளமோ ஐ. டி. இஞ்சினியர் போல ATM பிதுங்கும் வருமானமோ வாங்க முடியவில்லை.

கட்டிய மனைவி வெறுத்ததால், சம்பளத்திற்காக ஒருத்தியை சேர்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அவளுக்கும் இவரின் சுயரூபம் தெரிய வரவே ஒதுக்கி வைத்து விட்டாள்.

சொந்தக் கதையை சரோஜாதேவி ஸ்டைலில் எழுதி கல்லா கட்டிப் பார்த்தார். பெரிதாகத் தேறவில்லை. வாசகர்களைக் கூட்டி உண்டியல் குலுக்கிப் பார்த்திருக்கிறார் அப்போதும் முதலுக்குத் தான் மோசம் நேர்ந்துள்ளது. கூடவே ஒட்டியிருக்கும் நண்பர்கள் சிலர் போட்ட தூபத்தால் சர்வதேச பரிசு என்ற மோகம் வேறு சேர்ந்து கொண்டதால் அவரது சுமை கூடிக் கொண்டேயிருந்தது.

'தம்பி என்னால எழுதிப் பெருசா சம்பாதிக்கவும் முடியல... வெக்கத்த விட்டு பிச்சையெடுக்கவும் மனம் ஒப்பல...'

அதனால் தான் இந்தத் தளர்ந்த நடையா?

'நல்ல வேளை நான் எழுத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கவும் இல்லை. கழுத்துக்கு மேலே பாரமாகவும் இல்லை.' என்று விஜயனின் மனம் நிம்மதியாய் உணர்ந்தது. தன்னைப் பெற்ற அம்மாவுக்கும் மகனாக ஏற்றுக் கொண்ட அப்பாவுக்கும் மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டான்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு அவனுக்கு இந்தச் சுமையில்லை என்பது சந்தோசமாக இருந்தது.